நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

Sunday, February 26, 2006

'கம்பீரக் குரலோன்' கணேஷ்வரனுக்கு...கண்ணீர் அஞ்சலி...



காற்றில் கலந்ததோ கம்பீரக் குரல்.....
-----------------------------------------------

26ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியில்
சகல கலாவல்லவனாக இருந்து...
இலங்கையில்மட்டுமல்ல, தென்தமிழகத்திலும்
லட்சக்கணக்கான ரசிகர்களை தம்பக்கம் ஈர்த்த
'கம்பீரக்குரலோன்' எஸ்.கணேஷ்வரன்...சமீபத்தில் அமரரானார்.

இதில்...நம்மை இன்னும் அதிகமாக...நெகிழ வைக்கும்...உருக வைக்கும் விஷயம்...... தமது ஒலிபரப்புப்பணியில் இவர் இருந்தபோதே திடீர் நெஞ்சுவலி வந்து ஒலிபரப்புக்கூடத்திலேயே இவர் உயிர் பிரிந்தது. திடீரென இவர்குரல் ஒலிப்பது நின்றுபோய்...பாடல் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது!

நிகழ்ச்சியை...உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்த நேயர்களுக்கோ குழப்பமாகஇருந்தது..!பிற்கு...உண்மை தெரியவந்ததும்... கடமையைச் செய்து கொண்டிருக்கும்போதே ராஜகர்ஜனை ஸ்தம்பித்துப் போனது என்ற உண்மை...அவர்கள் கண்களை கட்டற்ற கண்ணீரில்ஆழ்த்தியது....


நாடகத்துறை, இசைத்துறை, கவிதைகள் எழுதுவது, நேயர்கள் எழுதி அனுப்பும் பாடல்களுக்கு ரசிக்கத்தக்க வகையில் மெட்டு போடுவது,


இசையும் கதையும் நிகழ்ச்சியில் நெஞ்சத்தை அள்ளும் விதத்தில் நவரச நடிப்பு,

அதிக ஆர்ப்பாட்டமின்றி, மற்றவர்கள் தொடத் தயங்கும் நிகழ்ச்சிகளைக் கூட தன் வசம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பொறுமையுடன் கலந்த போராட்ட குணம்,

நேயர் அரங்கம் நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் விதம் கண்டு எல்லையில்லா பிரமிப்பு,

இலங்கையில் மட்டுமல்லாமல் தென் தமிழகம் முழுக்க எத்தனை லட்சம் ரசிகர்கள்……இவைதாம் மறைந்த கணேஷ்வரனுக்கு நாம் வழங்கும் அர்த்த வடிவம்… ஆகாயம் மட்டும் வளர்ந்த விஸ்வரூப தரிசனம்….

ஒரு அறிவிப்பாளனுக்கு இத்தனை புகழ் ஆராதனையா?! என்று வியக்கிறீர்களா? அதை சொல்லித் தெரியாது.. இவர் குரலைக் கேட்டால் மட்டுமே உணர முடியும்!

கடவுளைப் பார்க்காமல் உணர்வது போல..மைக் இல்லாமலேயே எஃகு திறனாலான குரல் ஒன்று, இலங்கை வானொலியின் ஒலிபரப்பு அறையில் இருந்து கிளம்பி, முட்டி மோதி பல பள்ளம் மேடுகளைத் தாண்டி, மலைச் சாரலில் தவழ்ந்து, மதகுகளின் மந்தகாசமேனியை மயிலிறகு போல் வருடி, நம் நெஞ்சங்களின் பாவ புண்ணிய அறைகளை பாரபட்சம் இல்லாமல் வந்தடைந்தால், அதுவே கணேஷ் அண்ணாவின் குரல்….

கணேஷ் அண்ணாவின் முதல் பரிச்சயம் எனக்கு 2002 பிப்ரவரியில்…. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவருடைய குரலினைக் கேட்டு வந்தாலும், நேரிடையாக தொலைபேசியில் உரையாடியது மேற்சொன்ன நாட்களில்தான்…

முதல் பேச்சிலேயே தெரிந்துவிட்டது இவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்று.. நான் ஃபோன் செய்யும் போது அவர் வீட்டில் இல்லை… அவருடைய துணைவியார் எடுத்து பேசிவிட்டு, என் தொலைபேசி எண்ணைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ,கணேஷ் அண்ணன் வந்தவுடன் சொல்வதாகச் சொல்லி வைத்து விட்டார்.

சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக இன்ப அதிர்ச்சி..

கொஞ்சம் கூட தான் ஒரு பெரிய அறிவிப்பாளன் என்கிற தொனி எள்ளளவும் ஒலிக்காமல் பேசினார், அந்த ‘உண்மையான ஒலிபரப்பாளன்’ ....

இப்படியாக அந்த மாமனிதருடன் ஆரம்பித்த நட்பு, சொந்த சசோதரனுடனான பாசத்தைவிட அதிகமாக வளர்ந்து கொண்டே வந்தது… வாழ்வில் ஒரு நாளேனும் இலங்கை வானொலியில் தடம் பதிக்கவேண்டும் என்ற பூர்வ ஜென்ம ஞாபகத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக இலங்கை மண்ணில் என் காலடியை பதித்தபொழுது, விமான நிலையத்தில் இருந்து என்னை அன்போடு கூட்டிச்சென்று அவருடைய வீட்டில் தங்க வைத்து,
அன்போடு உணவு பரிமாறியதிலிருந்து, அங்கிருந்த நான்கு நாட்களும் கண்களை இமைகள் காப்பதுபோல் உடனிருந்து போற்றிப் பாதுகாத்தார்.

இடையில் என்னுடைய பேட்டி இலங்கை முழுக்க ஒலிபரப்பாக அவர் எடுத்த முயற்சிகள் எழுதி மாளாது.

கணேஷ் அண்ணாவின் குரலில் இருந்த கர்ஜிப்பு, எல்லாவற்றையும் உடைத்து வெளியேறிக்கொண்டு வரும் தீவிரத்தன்மை… என்றுமே அவர் செய்கையில் இருந்ததில்லை.....

மென்மை… மென்மை… மென்மைதான்..

இரண்டாம் முறை என்னுடைய நண்பருடன் இலங்கை சென்றபோதும் எங்களுடன் காலேஜ் மாணவன் போல் டி-சர்ட் அணிந்து கொண்ட அந்த இனிமையான நாட்களை நினைத்தால், கண்களில் நீர் பெருக்கெடுத்து இந்தக் கட்டுரையினை எழுத முடியாமல் என்னைத் தடுக்கிறது.

கண்டி, நுரேலியா, போன்ற இடங்களில் கடும்குளிரை தாங்கமுடியாமல் நவம்பர்-2004 இல் கணேஷ் அண்ணா அவஸ்தைப் பட்டபோது எங்களுக்கே கஷ்டமாக இருந்தது… அந்த புதிய சூழ்நிலை அவருக்கு ஒத்து வரவில்லை… காய்ச்சல் மற்றும் சளி, இருமலால் பாதிக்கப்பட்டார்.

ஏதாவது ஒரு இடத்திற்கு பார்க்கக் கூப்பிட்டாலும், ‘நீங்க போய் வாங்க… நான் காரிலேயே இருக்கிறேன்’ என்பார்.

கலைப்பணி, கலை வெறி போன்றவற்றிற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு வீடு, உடல்நிலை போன்றவற்றில் அக்கறை செலுத்தாமல் மாண்டு போன மாமேதைகள் வரிசையில் இவரும் முக்கியமானவராகிவிட்டார்.

“நடிகர் திலகம்” சிவாஜிகணேசனின் நினைவு நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்தும் விதமாக எங்கள் நிறுவனம் செய்யச் சொல்லி கணேஷ் அண்ணாவிடம் வேண்டும்போது, நான் சில ஒலிநாடாக்களை இங்கிருந்து அனுப்பி வைப்பேன்..

ஆனால் கணேஷ் அண்ணா இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, நான் அனுப்பும் வசன, பாடல் ஒலிநாடாக்களிலும் சிறந்த வசன பகுதிகளை இலங்கை வானொலியின் ஒலிக்களஞ்சியத்தில் இருந்து எடுத்து ஒலிபரப்புவார்.

நமக்கோ சந்தோஷமும்? ஆச்சரியமும் வானைத் தொட்டுவிடும்…

ஞாயிறு மதியம் இலங்கை வானொலியின் “தென்றல்” ஒலிபரப்பில் வலம் வரும் “அள்ளித் தரும் வெள்ளித்திரை” நிகழ்ச்சி நேயர் நெஞ்சங்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றிருந்தது….

அதே போல கொழும்பு சர்வதேச வானொலியின் “பாட்டும் பதமும்” நிகழ்ச்சியும் இவரின் தனித்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கூடவே இவர், இவர்தம் துணைவியார், மகள்கள்கூட இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தி கொழும்பு நகரில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்கள். தன்னுடைய திறமைகள் சரிவர பயன்படுத்தப்படவில்லையே என்ற தீராத ஏக்கமும் இவருக்குச் சிறிது உண்டு.

.
கூடிய சீக்கிரமே கணேஷ் அண்ணா இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவைக்கு “பணிப்பாளர் நாயகமாக” [Station Director] ...பதவி உயர்வு பெறும் கால கட்டம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதற்குள் காலன் அவரின் உயிரைப் பறித்து தனக்கு தீராத இழுக்கு தேடிக்கொண்டுவிட்டான்.

1980-களில் இந்த அறிவிப்பாளர் உத்யோகத்திற்கு வந்த அவரின் கலைப்பயணம் இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிடும் என்பது யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று..

இவரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் எல்லாம் சினிமாத் துறையிலும், ஓலிபரப்புத் துறையிலும், நாடகத் துறையிலும். இசைத்துறையிலும் கொடி கட்டிப் பறக்க, இவர் மட்டும் ஏற்றி விட்ட ஏணியாய் இருந்து, இறுதியில் அண்ணாந்து அவர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டே மனதைத் தேற்றிக்கொண்டார்.

தீராத நடிப்பு ஆர்வமும் கொண்ட கணேஷ் அண்ணா சில தமிழ், சிங்களப் படங்களிலும் நடத்துள்ளார்.

அதிலும் கடைசியாக, தமிழில் வந்த “காசி” படத்தினை சிங்களத்தில் எடுத்த பொழுது, தமிழில் வினுசக்ரவர்த்தி நடித்த குணசித்ர வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளுக்கு நல்லவர்களைத் தன் அருகிலேயே வைத்துப் பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்!

கணேஷ் அண்ணா! உங்கள் குரல் இடை ஒலித்த பாடல்களின் ஒலிநாடாக்களை நாங்கள் பத்திரப்படுத்தி வைத்து போற்றி கேட்டு, உங்களின் ஞாபகங்களை திரும்ப திரும்ப மீட்டி வந்தாலும், தெய்வீக புன்னகை தவழும் உங்கள் திருமுகத்தைக் காண்பது எப்போது!

என்றும் அழிக்க முடியாத நினைவுகளுடனும்...உருக்கத்துடனும்
விஜயராம் ஏ.கண்ணன்

14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.



2 Comments:

  • At 12:00 AM, Blogger Kanags said…

    மறைந்த ஒலிபரப்பாளர் கணேஷ்வரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

     
  • At 6:05 AM, Blogger ஜோசப் இருதயராஜ் said…

    கொஞ்ச நாளாக எல்லாத்தையும் மறந்து போயிருந்த நேரம்,

    இன்றைக்கு பார்த்து... திரைப்படபாடல் வரிகள் தேடலாம் என்று கூகிலுக்குள் நுழைந்ததில்... உங்கள் இல்லம் வரகிடைத்தது. கணேஷ்வரனின் மறைவு குறித்து உங்கள் பகுதியை பார்த்தேன்...
    பதிவுக்கு மிக்க நன்றி!...

    எனக்கு திரு கணேஷ்வரனை 90களில் தெரியும்... அப்போது நான் இலங்கையின் தலைநகரில் இருந்த இசைக்குழுக்களில் சேர்ந்திருந்த நேரம்...

    அருமையான மனிதர்... எந்த ஒரு மேன்மை தனம், ஆடம்பரம் இல்லாத எளிய கலைஞன். எங்கள் குழுவில் சேர்ந்து இசை நிகழ்சிசகளுக்கு வருவார்... நானும் அவரும் சேர்ந்து அந்த காலங்களில் பிரபலமாகியிருந்த "அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த..." என்ற பாடலை தான் மேடைகளில் பாடுவோம். இளமையெனும் பூங்காற்று பாடல் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    அந்த நாட்களில் இலங்கைவானொலியில், அரங்கேற்றம் என்று ஒரு நிகழ்ச்சியை தயாரித்து அளித்து வந்தார், அதில் எனக்கு வாய்ப்பு வழங்கி என்னை இசையமைக்க தூண்டியவர், என்னை ஊக்குவித்தவர்.... யாராக இருந்தாலும் உதவும் மனபக்குவம் கொண்டவர், தொழிலில் அரசியல் பண்ண தெரியாதவர்.
    நல்ல மனம் கொண்ட மனிதர். மனதை போலவே உடம்பும் பெரிதாக வாய்க்க பெற்றவர்.

    ரொம்பவும் மகிழ்ச்சி ஒரு நல்ல மனிதனை பற்றி ஒரு நாலு வரி எழுதி அஞ்சலி செலுத்தியதற்கு....!

    அன்புடன்
    ஜோசப் இருதயராஜ்

     

Post a Comment

<< Home