நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

Sunday, February 26, 2006

'கம்பீரக் குரலோன்' கணேஷ்வரனுக்கு...கண்ணீர் அஞ்சலி...



காற்றில் கலந்ததோ கம்பீரக் குரல்.....
-----------------------------------------------

26ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியில்
சகல கலாவல்லவனாக இருந்து...
இலங்கையில்மட்டுமல்ல, தென்தமிழகத்திலும்
லட்சக்கணக்கான ரசிகர்களை தம்பக்கம் ஈர்த்த
'கம்பீரக்குரலோன்' எஸ்.கணேஷ்வரன்...சமீபத்தில் அமரரானார்.

இதில்...நம்மை இன்னும் அதிகமாக...நெகிழ வைக்கும்...உருக வைக்கும் விஷயம்...... தமது ஒலிபரப்புப்பணியில் இவர் இருந்தபோதே திடீர் நெஞ்சுவலி வந்து ஒலிபரப்புக்கூடத்திலேயே இவர் உயிர் பிரிந்தது. திடீரென இவர்குரல் ஒலிப்பது நின்றுபோய்...பாடல் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது!

நிகழ்ச்சியை...உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்த நேயர்களுக்கோ குழப்பமாகஇருந்தது..!பிற்கு...உண்மை தெரியவந்ததும்... கடமையைச் செய்து கொண்டிருக்கும்போதே ராஜகர்ஜனை ஸ்தம்பித்துப் போனது என்ற உண்மை...அவர்கள் கண்களை கட்டற்ற கண்ணீரில்ஆழ்த்தியது....


நாடகத்துறை, இசைத்துறை, கவிதைகள் எழுதுவது, நேயர்கள் எழுதி அனுப்பும் பாடல்களுக்கு ரசிக்கத்தக்க வகையில் மெட்டு போடுவது,


இசையும் கதையும் நிகழ்ச்சியில் நெஞ்சத்தை அள்ளும் விதத்தில் நவரச நடிப்பு,

அதிக ஆர்ப்பாட்டமின்றி, மற்றவர்கள் தொடத் தயங்கும் நிகழ்ச்சிகளைக் கூட தன் வசம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பொறுமையுடன் கலந்த போராட்ட குணம்,

நேயர் அரங்கம் நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் விதம் கண்டு எல்லையில்லா பிரமிப்பு,

இலங்கையில் மட்டுமல்லாமல் தென் தமிழகம் முழுக்க எத்தனை லட்சம் ரசிகர்கள்……இவைதாம் மறைந்த கணேஷ்வரனுக்கு நாம் வழங்கும் அர்த்த வடிவம்… ஆகாயம் மட்டும் வளர்ந்த விஸ்வரூப தரிசனம்….

ஒரு அறிவிப்பாளனுக்கு இத்தனை புகழ் ஆராதனையா?! என்று வியக்கிறீர்களா? அதை சொல்லித் தெரியாது.. இவர் குரலைக் கேட்டால் மட்டுமே உணர முடியும்!

கடவுளைப் பார்க்காமல் உணர்வது போல..மைக் இல்லாமலேயே எஃகு திறனாலான குரல் ஒன்று, இலங்கை வானொலியின் ஒலிபரப்பு அறையில் இருந்து கிளம்பி, முட்டி மோதி பல பள்ளம் மேடுகளைத் தாண்டி, மலைச் சாரலில் தவழ்ந்து, மதகுகளின் மந்தகாசமேனியை மயிலிறகு போல் வருடி, நம் நெஞ்சங்களின் பாவ புண்ணிய அறைகளை பாரபட்சம் இல்லாமல் வந்தடைந்தால், அதுவே கணேஷ் அண்ணாவின் குரல்….

கணேஷ் அண்ணாவின் முதல் பரிச்சயம் எனக்கு 2002 பிப்ரவரியில்…. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவருடைய குரலினைக் கேட்டு வந்தாலும், நேரிடையாக தொலைபேசியில் உரையாடியது மேற்சொன்ன நாட்களில்தான்…

முதல் பேச்சிலேயே தெரிந்துவிட்டது இவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்று.. நான் ஃபோன் செய்யும் போது அவர் வீட்டில் இல்லை… அவருடைய துணைவியார் எடுத்து பேசிவிட்டு, என் தொலைபேசி எண்ணைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ,கணேஷ் அண்ணன் வந்தவுடன் சொல்வதாகச் சொல்லி வைத்து விட்டார்.

சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக இன்ப அதிர்ச்சி..

கொஞ்சம் கூட தான் ஒரு பெரிய அறிவிப்பாளன் என்கிற தொனி எள்ளளவும் ஒலிக்காமல் பேசினார், அந்த ‘உண்மையான ஒலிபரப்பாளன்’ ....

இப்படியாக அந்த மாமனிதருடன் ஆரம்பித்த நட்பு, சொந்த சசோதரனுடனான பாசத்தைவிட அதிகமாக வளர்ந்து கொண்டே வந்தது… வாழ்வில் ஒரு நாளேனும் இலங்கை வானொலியில் தடம் பதிக்கவேண்டும் என்ற பூர்வ ஜென்ம ஞாபகத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக இலங்கை மண்ணில் என் காலடியை பதித்தபொழுது, விமான நிலையத்தில் இருந்து என்னை அன்போடு கூட்டிச்சென்று அவருடைய வீட்டில் தங்க வைத்து,
அன்போடு உணவு பரிமாறியதிலிருந்து, அங்கிருந்த நான்கு நாட்களும் கண்களை இமைகள் காப்பதுபோல் உடனிருந்து போற்றிப் பாதுகாத்தார்.

இடையில் என்னுடைய பேட்டி இலங்கை முழுக்க ஒலிபரப்பாக அவர் எடுத்த முயற்சிகள் எழுதி மாளாது.

கணேஷ் அண்ணாவின் குரலில் இருந்த கர்ஜிப்பு, எல்லாவற்றையும் உடைத்து வெளியேறிக்கொண்டு வரும் தீவிரத்தன்மை… என்றுமே அவர் செய்கையில் இருந்ததில்லை.....

மென்மை… மென்மை… மென்மைதான்..

இரண்டாம் முறை என்னுடைய நண்பருடன் இலங்கை சென்றபோதும் எங்களுடன் காலேஜ் மாணவன் போல் டி-சர்ட் அணிந்து கொண்ட அந்த இனிமையான நாட்களை நினைத்தால், கண்களில் நீர் பெருக்கெடுத்து இந்தக் கட்டுரையினை எழுத முடியாமல் என்னைத் தடுக்கிறது.

கண்டி, நுரேலியா, போன்ற இடங்களில் கடும்குளிரை தாங்கமுடியாமல் நவம்பர்-2004 இல் கணேஷ் அண்ணா அவஸ்தைப் பட்டபோது எங்களுக்கே கஷ்டமாக இருந்தது… அந்த புதிய சூழ்நிலை அவருக்கு ஒத்து வரவில்லை… காய்ச்சல் மற்றும் சளி, இருமலால் பாதிக்கப்பட்டார்.

ஏதாவது ஒரு இடத்திற்கு பார்க்கக் கூப்பிட்டாலும், ‘நீங்க போய் வாங்க… நான் காரிலேயே இருக்கிறேன்’ என்பார்.

கலைப்பணி, கலை வெறி போன்றவற்றிற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு வீடு, உடல்நிலை போன்றவற்றில் அக்கறை செலுத்தாமல் மாண்டு போன மாமேதைகள் வரிசையில் இவரும் முக்கியமானவராகிவிட்டார்.

“நடிகர் திலகம்” சிவாஜிகணேசனின் நினைவு நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்தும் விதமாக எங்கள் நிறுவனம் செய்யச் சொல்லி கணேஷ் அண்ணாவிடம் வேண்டும்போது, நான் சில ஒலிநாடாக்களை இங்கிருந்து அனுப்பி வைப்பேன்..

ஆனால் கணேஷ் அண்ணா இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, நான் அனுப்பும் வசன, பாடல் ஒலிநாடாக்களிலும் சிறந்த வசன பகுதிகளை இலங்கை வானொலியின் ஒலிக்களஞ்சியத்தில் இருந்து எடுத்து ஒலிபரப்புவார்.

நமக்கோ சந்தோஷமும்? ஆச்சரியமும் வானைத் தொட்டுவிடும்…

ஞாயிறு மதியம் இலங்கை வானொலியின் “தென்றல்” ஒலிபரப்பில் வலம் வரும் “அள்ளித் தரும் வெள்ளித்திரை” நிகழ்ச்சி நேயர் நெஞ்சங்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றிருந்தது….

அதே போல கொழும்பு சர்வதேச வானொலியின் “பாட்டும் பதமும்” நிகழ்ச்சியும் இவரின் தனித்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கூடவே இவர், இவர்தம் துணைவியார், மகள்கள்கூட இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தி கொழும்பு நகரில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்கள். தன்னுடைய திறமைகள் சரிவர பயன்படுத்தப்படவில்லையே என்ற தீராத ஏக்கமும் இவருக்குச் சிறிது உண்டு.

.
கூடிய சீக்கிரமே கணேஷ் அண்ணா இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவைக்கு “பணிப்பாளர் நாயகமாக” [Station Director] ...பதவி உயர்வு பெறும் கால கட்டம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதற்குள் காலன் அவரின் உயிரைப் பறித்து தனக்கு தீராத இழுக்கு தேடிக்கொண்டுவிட்டான்.

1980-களில் இந்த அறிவிப்பாளர் உத்யோகத்திற்கு வந்த அவரின் கலைப்பயணம் இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிடும் என்பது யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று..

இவரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் எல்லாம் சினிமாத் துறையிலும், ஓலிபரப்புத் துறையிலும், நாடகத் துறையிலும். இசைத்துறையிலும் கொடி கட்டிப் பறக்க, இவர் மட்டும் ஏற்றி விட்ட ஏணியாய் இருந்து, இறுதியில் அண்ணாந்து அவர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டே மனதைத் தேற்றிக்கொண்டார்.

தீராத நடிப்பு ஆர்வமும் கொண்ட கணேஷ் அண்ணா சில தமிழ், சிங்களப் படங்களிலும் நடத்துள்ளார்.

அதிலும் கடைசியாக, தமிழில் வந்த “காசி” படத்தினை சிங்களத்தில் எடுத்த பொழுது, தமிழில் வினுசக்ரவர்த்தி நடித்த குணசித்ர வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளுக்கு நல்லவர்களைத் தன் அருகிலேயே வைத்துப் பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்!

கணேஷ் அண்ணா! உங்கள் குரல் இடை ஒலித்த பாடல்களின் ஒலிநாடாக்களை நாங்கள் பத்திரப்படுத்தி வைத்து போற்றி கேட்டு, உங்களின் ஞாபகங்களை திரும்ப திரும்ப மீட்டி வந்தாலும், தெய்வீக புன்னகை தவழும் உங்கள் திருமுகத்தைக் காண்பது எப்போது!

என்றும் அழிக்க முடியாத நினைவுகளுடனும்...உருக்கத்துடனும்
விஜயராம் ஏ.கண்ணன்

14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.



Wednesday, February 15, 2006

இலங்கை வானொலியில் இப்படிப் படுத்த மாட்டார்கள்






சிங்கப்பூர்வானொலியைப் பற்றி எழுதுவதாக நான் சொன்னதும் உங்களில் முக்கால் வாசியினர் அது எந்த வானொலி என்று யூகித்திருப்பீர்கள்.

இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டு! தமிழ் சேவை ஒன்று கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதை யார் கேட்டார்கள்? இதைப் பற்றி நிறைய பேர் பேசி விட்டார்கள். எழுதி விட்டார்கள். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லையென்றாலும் இலங்கை வானொலியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாதுதான்!

பொங்கும் பூம்புனல், ஒரு படப் பாடல், இன்பமும் துன்பமும், ஜோடி மாற்றம், மலர்ந்தும் மலராதவை, இசையும் கதையும் என்று எந்த பெயரில் நிகழ்ச்சி வந்தால் என்ன? நாம் விரும்பி கேட்கும் பாடல்களை மாறி மாறி வழங்குவதில் வள்ளல்தான்!

விரும்பிக் கேட்டவை,நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகள் நம்ப ஊர் வானொலிநிலையத்தில் வந்தாலும் அது எப்படி வரும் என்று யோசித்துப் பாருங்கள். ஐந்து நிமிடம் விரும்பிக் கேட்டவர்கள் பெயரையெல்லாம் படித்துவிட்டு 'அன்னக்கிளி' படத்தில் டி எம் சௌந்திரராஜன் பாடிய பாடல் என்று வைப்பார்கள்.

வெறுத்துப் போய் அடுத்த ஸ்டேஷன் திருப்பி அங்கேயும் விரும்பிக் கேட்டவர்கள் பெயரை மட்டும் கேட்டுவிட்டு பாட்டைக் கேட்காமல் மறுபடியும் முதல் ஸ்டேஷனை திருப்பி. இதனால்வீட்டில் ஒரு சட்டசபை அளவுக்கு குழப்பமும் ரகளையும் வந்து ரேடியோவை இனிமேல் யாரும் தொடக்கூடாது என்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்.

குங்குமம் படத்தில் சௌந்திரராஜன் சுசீலா பாடியது என்று 'பூந்தோட்டக் காவல்காரா' பாட்டை போடுவது வானொலி நிலையங்கள் செய்யும் சதியா? நிஜமாகவே நம் தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு ரசனை இவ்வளவுதானா? குங்குமம் படத்தில் இத்தனை பேர் விரும்பிக் கேட்கும் பாடல் 'தூங்காத கண்ணின்று ஒன்று' இல்லையா? எங்களுக்குத்தான் எல்லோரும் விரும்பிக் கேட்கும் பாடல் பிடிக்காமலிருந்ததா? போன்ற மர்மங்களுக்கு விடையே கிடைக்கவில்லை.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவ்வளவாக பிடிக்காத பாட்டு திரும்ப திரும்ப வைத்து ஹிட்டாகி விடும். வேறு வழியில்லாமல் நம்மையும் அறியாமல் அந்த பாட்டு நம் மூளையில் பதிவாகிவிடும். இன்று கூட அந்த ராசி தொடர்கிறது.

'மன்மத ராசா' பாட்டு கேட்டால் ரத்தக் கொதிப்பு ஏறுகிறது. ஆனால் வரிகள் மனப்பாடமாகிவிட்டது. பழி வாங்குவது போல் நமக்குப் பிடித்தப் பாடல்களாக பதிவு செய்து கேட்டாலும் வானொலியில் எதிர்பாராமல் நமக்குப் பிடித்தப்பாடல் வந்து கூடவே பாடும் துல்லிய சந்தோஷம் இதில் காணாமல் போய்விடுகிறது.

இலங்கை வானொலியில் இதை மாதிரி படுத்த மாட்டார்கள். நாம் எந்த பாட்டை எதிர்பார்க்கிறோமோ அதையே ஏமாற்றாமல் வைத்துவிடிவார்கள். அப்புறம் அறிவிப்பாளர்கள், அவர்களின் திறமை இதைப் பற்றி எல்லோரும் சொல்லி பழைய விஷயமாகி விட்டது.

ஹிந்தி பாடல்களைக் கூட அருமையான ரசனையோடு வைப்பார்கள். ராஜ்கபூர், முகேஷ் கூட்டணியில் ஸ்ரீ 420, பூட் பாலிஷ், ஆவாரா, மேரா நாம் ஜோக்கர், சங்கம் படப் பாடல்கள், ஷம்மி கபூர் படப் பாட்டு, குரு தத் பாட்டு, என்று பிரமாதமாக செலெக்ட் செய்துவைப்பார்கள்.

சில படங்களில் எல்லாப் பாடல்களும் விருப்பப் பாடல்களாக இருக்கும். அதை ஒரு படப் பாட்டு என்று வெள்ளிக்கிழமை அரை மணி நேரம் வைத்து விட்டால் தேன் குடித்த வண்டுகள்தான்! எங்காவது நரி தேன் குடித்து பார்த்திருக்கோமா? நரிக்கு பிடித்த உணவு என்ன வடை, தேன், திராட்சை, வத்தக் குழம்பு, சுட்ட அப்பளமா? நரியை நாய் மாதிரி வீட்டு செல்ல பிராணியாகவளர்த்தால் கடைசி இரண்டையும் சாப்பிடக் கூடிய சாத்திய கூறுகள் உண்டு. முதல் மூன்றும் சான்ஸே இல்லை.

நம் விருப்பப் பாடல்களுக்கு வருவோம். இவற்றையெல்லாம் முழு நேரமாக கேட்டு ரசிப்பது அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் அக்காக்கள்தான்!

சொந்த அக்கா இல்லாவிட்டால் என்ன? எஸ்எஸ்எல்சி முடித்து விட்டு டைப் ரைட்டிங், ஹிந்தி கிளாஸ், தையல் கிளாஸ், ஷார்ட் ஹேன்ட் (கொஞ்சம் யோசித்துத்தான் சேருவார்கள்.நிறைய எழுதணும். இங்கிலிஷ் நல்லாத் தெரியணும்) இப்படி ஏதாவது செய்து கொண்டு மீதி நேரம் அம்மாவுக்கு உதவியாக துணி துவைத்துக் கொண்டு, இட்லிக்கு அரைத்துக் கொண்டு திருமணத்திற்காக காத்திருக்கும் அக்காக்கள்!

எங்கள் ஊரில் கல்லூரி கிடையாது. வெளீயூருக்குச் சென்று ஹாஸ்டல், மாமா, அத்தை, சித்தப்பா, தாத்தா என்று எங்காவது தங்கிப் படித்தால் உண்டு. வசதி இல்லையென்றால் இருபத்தியேழு புள்ளி இடுக்குப் புள்ளி கோலம் போட்டுக் கொண்டு வாரப் பத்திரிகைகள் படித்துக் கொண்டு வாசலில் உதிரி மல்லிகைப் பூ வாங்கி தொடுத்துக் கொண்டும் காலம் கழிக்க வேண்டியதுதான்.

ஷார்ட் ஹான்ட், டைப் ரைட்டிங் முடித்தாலும் எங்க ஊரில் வேலை கிடைக்கவே... கிடைக்காது. சும்மா ஒரு தொழில் கல்வி கற்கிறோம் என்ற திருப்திதான்!

நிறைய பேருக்கு சொந்தத்திலேயே அத்தை பையன், மாமா பையன், மாமா முறை மாப்பிள்ளை இருப்பார்கள். இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், கையில் பணம் சேரட்டும், என்று லௌகீக காரணங்களுக்காக திருமணத்தை ஒரு வருடமோ இரண்டு வருடமோ தள்ளி போட்டிருப்பார்கள்.

அது வரை இந்தப் பெண்கள் பாடல்கள் கேட்டுக் கொண்டு கனவுகளில் காலம் கழிப்பார்கள். இந்த இரவல் அக்காக்கள் நம்மிடம் மட்டுமில்லாமல் வீட்டில் நம் அண்ணன் தம்பி எல்லோரிடமும் பிரியமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு "உடன் பிறவா அண்ணன்களை" ஆண்பிள்ளைகளுக்கு "உடன் பிறவாதங்கைகளை" ஏற்றுக் கொள்வதில் சற்று சிரமம் அதிகம்தான்! ஆனால் இது மாதிரி "உடன் பிறவா அக்கா தம்பிகளுடன்" பழகுவதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபணையும் இருக்காது.

விவரம் புரியாத வயதில் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் அன்று பள்ளியில் நடந்ததையெல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருப்போம். விவரம் வந்ததும் அம்மாவிடமிருந்து மறைக்க வேண்டிய ரகசியங்கள் நிறைய சேர்ந்து விடும்.

இதையெல்லாம் அக்காவிடம் சொல்லலாம். அக்காவும் தன் சொந்த தங்கையை விட நம்மோடு அந்நியோன்யமாகப் பழகி தன்னுடைய ரகசியங்களையெல்லாம் பகிர்ந்து கொள்வாள்.

'இன்னிக்கு மத்தியானம் காதலிக்க நேரமில்லை' ஒரு படப் பாட்டு வந்தது' என்று தகவல் சொல்வாள்.

அம்மாவுக்குத்தான் நாம் நினைக்கிற மாதிரி ஸ்டைலாய் பின்னி விடத் தெரியாதே! அக்காவிடம் போய் பின்னிக் கொள்ளலாம். தாவணியை அழகாக மடிப்பு வைத்து கட்டச் சொல்லித் தருவாள்.

அப்பொதெல்லாம் இந்த தலைகாணி உறை சூடிதாரெல்லாம் கிடையாது. தாவணி 'மயில்களாக' பெண்கள் உலவுவார்கள். வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்களே என்று நினைத்தால் ஊர் விஷயம், உலக ஞானம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் விவரமான அக்காக்கள். யார் மேல் யாருக்குக் கண், யார் யாருடன் தனியே ஊர் சுற்றுகிறார்கள் என்று ஊர் விஷயமெல்லாம் 'அப் டேட்' செய்வார்கள்.

குமுதம், தினமணிக் கதிர் போன்ற பெரியவர் பத்திரிகைகள் படித்து நம்மை அறியாப் பருவத்திலிருந்து அறியும் பருவத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

முறை மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தால் போதும், ஏகத்துக்கு வெட்கப்பட்டுக் கொண்டு அடுப்படியை விட்டு வெளியே வராமல் எட்டி பார்ப்பாள். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கொல்லைப் பக்கம் வாழை மரத்துக்கு மறைவில் பேசிக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நம் வீட்டிலிருந்தே பார்க்கலாம்.

அட! அவ்வளவு சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறாளே எதற்காக வெட்க நாடகமெல்லாம்? என்று அம்மாவிடம் போய்க் கேட்டால் சின்னப் பொண்ணா லட்சணமா இருக்கறதை விட்டு அக்கம் பக்கத்துலே நடக்கறதை வேடிக்கையா பார்க்கிறே' என்று திட்டுவாள்.

பெரியவர்களிடம் இதுதான் பிரச்னையே! என் கிட்ட எதையும் சொல்றதில்லை ரொம்ப பெரிய மனுஷியாப் போய்ட்ட என்று புலம்புவது! சரி பாவம் அம்மா இவ்வளவு சொல்கிறாளே என்று எதாவது பேசினால் ஒழுங்கா பதில் சொல்லாமல் திட்டுவது! நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டறேன்னு முணுமுணுத்து நகர வேண்டியதுதான்.

அன்றிரவு "காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா" பாட்டை கண்களில் நீர் வழிய கேட்டு விட்டு 'நேத்திக்கு பத்தரை மணிக்கு பாட்டு போட்டானே கேட்டியா' என்று விசாரிப்பாள்.

ஏற்கெனவே தெருவில் ஈ காக்கா நடமாடாது. ராத்திரி ஏழு மணிக்கு மேலே அமானுஷ்யமாக ஆகிவிடும். ஒன்பது மணிக்கு ஊரே அடங்கி தூங்கி விடுவோம்.

அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை நேரத்தில் மட்டும் கூட கொஞ்ச நேரம்தூங்கி வழிந்து கொண்டு விழித்துக் கொண்டிருப்போம். பத்தரை மணியெல்லாம் கடிகாரத்தில் காலை நேரம் பார்த்தால் உண்டு.

அக்கா மட்டும் ஏதோ இழந்த காதலின் சோகத்தில் மூழ்கியவள் போல் சுசீலாவின் 'காவேரி ஓரம் கதை சொன்னக் காதல்' நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை' பாடல்களை கேட்டு விட்டு பெரு மூச்சு விட்டுக் கொண்டிருப்பாள்.

வாழ்க்கையில் எந்த பரபரப்பும், பெரிதாக எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் அந்த வயதில் இதைப் போல கற்பனை சோகங்களில் மூழ்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அம்பை பிரமாதமா ஒரு கதை எழுதி இருக்காங்க!கடைசியில் இந்த பாசமிகு அக்காமார்கள் என்ன ஆவார்கள்? எல்லாத் தமிழ் சினிமாவைப் போல் கல்யாணத்தில் முடிந்து விடும்.

கல்யாணம் ஆனதும் புது மனுஷி ஆகி விடுவார்கள். வெள்ளைக் கல் நெக்லஸ், ஜிமிக்கி, மூக்குத்தி, தலை நிறைய பூவுடன் கல்யாணக் களையுடன் மறு வீடு வரும் போது அம்மாவைப் பார்த்து விட்டுப் போவர்கள். நம்மை அற்பப் பதர் போல் பார்ப்பாள். போகிற போக்கில் 'ரொம்ப துடுக்கா நடந்துக்காதே அம்மா சொல்றமாதிரி இரு' என்று அட்வைஸ் வேறு!

ஒரு வருடத்திற்குள் முதல் பரசவத்திற்கு வருவாள். அவ்வளவுதான்! அவள் கவிதை மனது, நட்பு, அன்பு எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோ? சந்திரிகா சோப் வாசனையுடன் இளமையுடன் அழகாக இருந்த அக்கா பழைய புடவையில் தலைமுடி சீவாமல் பூண்டு மசாலா மணத்துடன் எல்லாக் குடும்பப் பெண்களைப் போல் ' எங்க வீட்டுலே, எங்க வீட்டுக்காரர், எம்புள்ளே' என்று தனது வட்டத்தை குறுக்கிக் கொண்டு விடுவாள்.

இந்த வாழ்க்கைக்காகவா ஏங்கிக் கொண்டிருந்தாள் என்று தோன்றும்? திருமணமானதும் எல்லா 'மனிதர்களும்' சுயநலமிக்கவர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஒரு யதார்த்தமான உண்மைதானே?
- சித்ரா ரமேஷ்

-------- -------

'சென்னை 'சூரியன் எப்.எம். அறிவிப்பாளர்' யாழ் சுதாகர் எழுதிய
கே.எஸ்.ராஜா பற்றிய சிறப்புக் கட்டுரையைப் படிக்க...

இங்கே சொடுக்குங்கள்...


------ -------

தொடுப்புகள்.... [Links]

1. வானொலி உலகம்....

[இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய அரிய தகவல்களும்,
அபூர்வ புகைப் படங்களும்]


2..யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்க...
இங்கே சொடுக்குங்கள்.


3. தமிழ் மணம்.

Tuesday, February 14, 2006

கே.எஸ்.ராஜா வரும் போதே பரபரப்பு...



வாங்க 'பாட்டு'க் கேக்கலாம்...
---------------------------------------

நண்பர் ஒருவரிடம் 'ச்சாட்' டில் இருந்தேன்.
வழக்கமா விசாரிப்பு இருக்குமுல்லே அங்கேயும் இங்கேயும்.நலாமா? சாப்பிட்டாச்சா? இப்ப அங்கே என்ன மணி?( ஆமா இது ரொம்ப முக்கியம்:-) !

இப்படிச் சின்னப்பேச்சு.அதாங்க 'ஸ்மால் டாக்' அப்ப எதேச்சையா அவர் சொன்னாரு' பாட்டுக் கேட்டீங்களாமா?'ன்னு. என்ன பாட்டு? என்ன ஏதுன்னு விசாரிச்சப்ப ஒரு லிங்க் அனுப்புனாரு. அதுலே போனா பாட்டு அட்டகாசமா வந்துக்கிட்டு இருக்கு.

என்னதான் நாம் வீட்டுலே சி.டி, டேப்புன்னு போட்டுக் கேட்டாலும், அடுத்த பாட்டு என்னன்னு மனப்பாடமா ஆயிருதே. ரேடியோலே வர்றது மாதிரி ஆகுமா?

அதுலே ஒரு எதிர்பார்ப்பு, அடுத்து வரப்போறது என்னன்னு!இங்கே கொஞ்ச நாளு ரேடியோ ப்ரோக்ராம் நடத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியிலே வந்துட்டா எல்லாமே 'ஹிந்தி'ன்னுஆன நிலமையிலே இதுவும் 'கீத் மாலா'ன்ற ஹிந்தி நிகழ்ச்சிதான்.

வாரம் ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம்.இங்கே இருக்கற ஒரு இந்தியன் க்ளப்( இதை ஆரம்பிச்சவர் யாருங்கறீங்க? நம்ம 'கோபால்'தான். சமயம் பார்த்துகொஞ்சமே கொஞ்சம் தம்பட்டம் அடிக்கத்தாவலையா?) ரெண்டு மூணு பேர் ஆளுக்கு ஒருவாரமுன்னு நடத்துவோம். அப்ப அவுங்கெல்லாம் ஒரேடியா ஹிந்திப் பாட்டுங்க மட்டுமே போடுவாங்க. எனக்கோ ஒரே கடுப்பு. இந்தியான்னாஎல்லா மொழிகளும் இருக்கற நாடில்லையா, அதென்ன ஹிந்தி மட்டும் போடறதுன்னு? என் முறை வரும்போதுஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு மலையாளம், ஒரு தெலுங்கு, ஒரு குஜராத்தின்னு' கலந்துகட்டி அடிச்சுருவேன்.


அப்புறம்இது எல்லாருக்கும் பிடிச்சுப்போய், மத்தவங்களும் நம்மகிட்டே தமிழ்ப் பாட்டு வாங்கிட்டுப்போய் போட ஆரம்பிச்சாங்க.ஆனா அது என்ன பாட்டு, அதுக்கு அர்த்தம், பாடற காட்சி அமைப்பு, நடிகர், நடிகை யாரு,என்னன்னு எல்லாம் எழுதிக் கொடுக்கணும். அவுங்களும் அதுக்கொரு ச்சின்ன இண்ட்ரோ கொடுத்துட்டு அந்தப் பாட்டைப் போடுவாங்க. எப்படியோ ஒரு தமிழ்ப்பாட்டாச்சும் ரேடியோவுலே வருதேன்னு ஒரு சந்தோஷம்!!

இன்னிக்குப் பாட்டைக் கேட்டுக்கிட்டே இருந்தேனா,அப்படியே 'அந்தக் காலம்' போயாச்சு! இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புலே மாஞ்சுமாஞ்சுப் பாட்டுக் கேட்ட காலம்.அதிலும் நமக்கு ஃபேவரைட்டா இருக்கற 'ஜாக்கி'ங்கன்னு சிலபேர்.

இன்னைக்கு யாரு வரப்போறான்றதுலேயே ஒருச்சின்னப் போட்டி. நாம சொன்னவங்க வந்துட்டாங்கன்னா தோழிகள் மத்தியிலே 'ஏதோ ஜெயிச்சுட்டோம்'ன்ற வெற்றிப் பார்வைவுடறதுன்னு இப்படியெல்லாம்........ஹூம்.

கே.எஸ், ராஜா வரும்போதே, அவரோட 'சிக்னேச்சர் ட்யூன்' கேட்டவுடனே ஒரு பரபரப்புத் தொத்திக்கும். அழகான இலங்கைத்தமிழ்.

அடுத்து வருவதுன்னவுடனே பாட்டோட தொடக்கம் இக்குனூண்டு கேட்டவுடனே பாட்டு, படம்,பாடுனவங்க பேருன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சுருவோம். இந்தக் கவனம் மட்டும் படிப்புலே இருந்திருந்தா,இப்ப நம்ம 'ரேஞ்சே' வேறயாயிருக்கும்:-)


இங்கேயும்தாம் எப்பப்பார்த்தாலும் 'லோலோ'ன்னு ரேடியோவும் , டிவியும் போய்க்கிட்டு இருக்கு.ஆனா நம்ம வீட்டுலே நான் வண்டியிலே ஏறுனதும் மொதவேலையா ரேடியோவை ஆஃப் செஞ்சுருவேன்.'ஆமா, பொல்லாத பாட்டு. இளையராஜாம்யூசிக் பாருங்க'ன்னு சொல்லி 'டப்'னு அதை அணைச்சாத்தான் கார் சீட் பெல்ட்டே போடமுடியும்:-)

நான் பாட்டுக்கு ஏதேதோ அளந்துக்கிட்டு இருக்கேன் பாருங்க. இந்தப் பாட்டு வர்றது ஷ்யாம் ரேடியோ. 24 மணி நேரமும்வருதாம்.டவுன்லோடு ஒண்ணும் செய்யவேணாம் . அப்படியே வரும்ன்னு சொல்றாங்க.பாட்டுக் கேட்டுட்டு, குத்தங்குறை சொல்லாம இருக்கமுடியாதுல்லே. உடனே ஒரு 'மயில்'தட்டிவுட்டேன். 'இந்தமாதிரி உங்க சேவை நல்லா இருக்குப்பா. ஆனா போட்ட பாட்டையே ரிப்பீஈஈஈஈஈஈஈட்டு செஞ்சுகிட்டே இருக்கீங்களே.

புதுப்பாட்டு ( ஆமாம். இது என்னாத்துக்கு? சிலதைத்தவிர மத்ததெல்லாம் ஒரே இரைச்சல்தான்), பழைய பாட்டுன்னு (மனசுலே அச்சாப் பதிஞ்சுபோன 70, 80களிலே வந்ததுங்க என்னமா இருக்கு. ஆஹா... .....அங்கெ யாரோ வயதுபோன ஆக்களுக்கு வேற வேலை இல்லைன்னு முணங்கறாங்க.....)

எவ்வளோ இருக்குன்னு அதுலே போடுங்கப்பா'ன்னு.என்ன ஆச்சரியம். உடனே அங்கிருந்து பதில் 'மயில்' வந்துருச்சு! நீங்க நியூஸியிலே இருந்து பாட்டைக் கேட்டுட்டு எழுதுனதுரொம்ப சந்தோஷமாயிருச்சு. உங்களுக்கு எதுனா 'இஷ்டப்பாட்டு' இருந்தாச் சொல்லுங்க . நேயர் விருப்பத்துலெ போட்டுரலாம்னு.நல்ல மரியாதைப்பட்ட மனுஷங்கதான்.ஏதோ 'சப்ஸ்க்ரிப்ஷன்'ன்னு சொன்னதையும் கேட்டேன்.

அதிகமா ஒன்னுமில்லே. அதைப் பத்தியும் கொஞ்சம்யோசிக்கணும். நீங்களும் முடிஞ்சாக் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம், 'இந்த அக்கா' இதைச் சொல்லாம வுட்டுட்டான்னுபேசக்கூடாது, ஆமாம்.இதைப் பதிவு செய்யற நேரம் பாடுறது, 'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது'!!!!

http://www.shyamradio.com/

நன்றி ; துளசிதளம்

இலங்கை வானொலி நினைவலைகள்





வலைப் பூவில் ராஜ்குமார் எழுதியது.
-----------------------------------------------
எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தென் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் இதன் பாதிப்பில்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று இருவிதமான ஒளிபரப்பினை நடத்தி வந்த இலங்கை வானொலி என் வாழ்க்கையில் நான் தொலைத்து விட்ட நண்பன்.
83 ம் ஆண்டு இனக்கலவரங்களில் அவன் கடுமையாக காயமுற்று விட்டான் . அதன் பின்பு அவனை முழுமையான வீச்சில் நான் பார்க்கவில்லை.


தமிழர்களிடம் வானொலி கேட்கும் வழக்கத்தையும், நல்ல தமிழ் பேசக் கூடிய ஆர்வத்தையும் வளர்த்தது இலங்கை வானொலி. இப்போது சென்னை FM வானொலி நிலையங்களை கேட்கும் போது தரமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை தர இயலாத கற்பனைப் பஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது. பாடல்களை ஒலிபரப்புவதையும் பல்வேறு சுவைகள் கலந்து செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டியது இலங்கை வானொலி.

முதலில் நிகழ்ச்சிக்கு தரப்பட்ட அழகிய தமிழ் பெயர்கள் இன்றும் நினைவில் நிற்பவை.

1. பொங்கும் பூம்புனல் ( காலை 7.00)

2. நேயர் விருப்பம்

3. நீங்கள் கேட்டவை ( காலை 9.30 -10.00, மாலை 5.30-5.58)

4. அன்றும் இன்றும்

5. புது வெள்ளம்

6. மலர்ந்தும் மலராதவை

7. இசைத் தேர்தல்

8. பாட்டுக்கு பாட்டு

9. இசையும் கதையும்

10. இன்றைய நேயர்

11. விவசாய நேயர் விருப்பம்

12. இரவின் மடியில் ( இரவு 10.30)

இவ்வாறான தமிழ்பெயர்களை நம் நாட்டில் வைப்பார்களா?

ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் 'இசைத் தேர்தல்" என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் வரும் "என்னடி மீனாட்சி" பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது.

இன்று 'கவுண்ட்டவுன்" என்பதே தமிழ் வார்த்தையாகி விட்டது.
காமெடி டைம், சினிமா டைம் என்று தமிழில்லாத தமிழ்.
பெயர்களை விட்டுத் தள்ளுங்கள்.


இவ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இருந்த கற்பனைத்திறன் அலாதியானது.நிகழ்ச்சித் தயாரிப்பை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு, ஒரு நிமிடம் தமிழ், அன்றும் இன்றும் போன்ற , இன்றும் பல்வேறு கல்லூரி விழாக்களிலும், தொலைக் காட்சி சானலிலும் பார்க்கும் நிகழ்ச்சிக்களை உருவாக்கியவர்கள் இவர்கள்.

கே.எஸ். ராஜா என்ற புகழ்பெற்ற அறிவிப்பாளர் "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.

நீயா படத்தில் " என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா? என ஸ்ரீபிரியா அலறுவதாக வசனம் வரும்.

அந்த வசனத்தைப் போட்டுவிட்டு "போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன். அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா" என அசத்தலாக சொல்வார்.

இதே காலத்தில்தான் நம் திருச்சி வானொலி நிலையத்தில் பகலில் ஓர் இரவு படப் பாடலை போடுவதாக சொல்லி விட்டு, காளி கோவில் கபாலி படப் பாடலைப் போட்டுவிட்டு, தவறுக்கு வருந்தக் கூட மாட்டார்கள்.


இலங்கைக் கலவரத்தின் போது, கே.எச் ராஜா இறந்து விட்டதாக புரளி வந்தது. அப்துல் ஹமீதைப்பற்றியும் அதே புரளி வந்தது. ஆனால் இருவரும் நலமாகவே இருந்த

இன்னும் பல நிகழ்ச்சிகள் உண்டு. என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன். எனக்குப் பிடித்த அறிவிப்பாளர்களையும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் நினைவுகூற விரும்புகிறேன்.

அப்துல் ஹமீதை அனைவரும் அறிவீர்கள். கே.எஸ். ராஜா, மயில் வாகனம் சர்மானந்தா,ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் என்னைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்.

இதைத் தவிர "திரைக் கதம்பம்" என்று மாற்றுச் சனிக்கிழமைகளில் காலை 9.30 க்கு நிகழ்ச்சி நடத்துவார் ஒரு அறிவிப்பாளர். அவரது பெயர் மறந்து விட்டது. யாராவது சக நண்பர்கள் நினைவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். கண்ணதாசனின் பிரியரான இவர் சுவையான நிகழ்வுகளையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்வார்.

கண்ணதாசன் மறைந்தவுடன், இலங்கை வானொலியில் இரண்டு மணிநேரம் அவரை நினைவு கூர்ந்து பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஏழாம் வகுப்பு சிறுவனான நான்,கண்ணதாசன் என்ற கவிஞனின் வீர்யத்தை முழுமையாக உணரவைத்த நிகழ்ச்சி.

பாடல்களை ஒளிபரப்பும் போது இசையமைப்பாளர் மற்றும் கவிஞர்களின் பெயரையும் சேர்த்து சொல்லும் மிக நல்ல வழக்கத்தை இவர்கள் கடைபிடித்தார்கள், இதனாலேயே பல கவிஞர்களின் பாடல்கள் நினைவில் இருக்கிறது.

உதாரணமாக 'கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு" என்று ஒரு பாடல் உண்டு. பாட்டின் தொனியை வைத்து நிறைய பேர் பாடல் எழுதியது கண்ணதாசன் என்று சொல்வார்கள். ஆனால் இப்பாடலை எழுதியது ஆலங்குடி சோமு. இதை நான் அறிந்தது இலங்கை வானொலி மூலமாகத்தான்.

துப்பறியும் ரத்தினம் என்ற தொடர் நாடகம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். வாரவாரம் ஒரு கொலையை ரத்தினம் துப்பறிந்து கண்டுபிடிப்பார். அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை வாசகர்கள் யூகித்து தபால் அட்டையில் எழுத வேண்டும். பல வாரங்கள் வந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் ரத்தினம் இறந்து விட்டார் என்றார்கள்.உண்மையா என்பது தெரியவில்லை.

அக்டோபர் இரண்டாம் தேதி நம் வானொலி நிலையத்தில் டி.ஆர் பாப்பாவின் மெல்லிசைகள் காந்தியின் புகழ் பரப்ப, தமிழ்சேவை ஒன்றில் காந்தியின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பி மகாத்மாவை நினைவு கூர்ந்தார்கள் .உடல் சிலிர்த்தது மகாத்மாவின் பேச்சைக் கேட்டதும்.
82ம் ஆண்டு ,7.30க்கு இரவு ஒளிபரப்பையும் துவக்கினார்கள்.அன்றைய இரவு அனைவர் வீட்டிலும் அலறியது இலங்கை வானொலி. இவ்வொலிபரப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே இலங்கைக் கலவரம் வெடித்தது.யாழ்ப்பாணம் ஒளிபரப்பு நின்று போனது.


இந்தி தெரியாவிடினும், என்னை இந்திப் பாடல்களை ரசிக்க வைத்தது இலங்கை வானொலி. இப்பொழுது சென்னையில் இருப்பதால் இலங்கை வானொலி கேட்க இயலவில்லை. இவர்களிடம் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.

மெல்லிசை , துள்ளிசை என வகைப்படுத்தி பாட்டுப் போடுவார்கள்.

நம்ம ஊர் மாதிரி முதல் பாடல் " கண்ணே கலை மானே" இரண்டாம் பாடல் " ஆள்தோட்டா பூபதி" என தாவ மாட்டார்கள்.

எந்தப் பாடல், எங்கிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதற்காகவும் ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். "மேகமே மேகமே" பாடல் ஜப்பானிய இசையை தழுவி எடுத்ததாக அந்த இசையையும் ஒளிபரப்பினார்கள்.

முன்பு சொன்னதைப் போல நண்பனை இழந்து விட்டேன். இருப்பது நினைவுகள் மட்டுமே.

----- ------ -------

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வந்திருந்த போது அவர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு அளித்த பேட்டியைக் கேட்க ...இங்கே சொடுக்குங்கள்.....] [ NEW ]

சென்னை சூரியன் எப்.எம்.அறிவிப்பாளர் யாழ் சுதாகர் எழுதும் பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...


யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
[TO LISTEN TAMIL OLD SONGS] இங்கே சொடுக்குங்கள்.


YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR,
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS