நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

Thursday, September 18, 2008

ஆனந்த அலை....



'தென்றலும் புயலும்'....

இந்தக் கடிதத்தை எழுதிய ஜனார்த்தனன் என்கின்ற ஜனாவை 31 வருடமாக நான் தேடிக் கொண்டிருந்தேன்.அதாவது கந்தர்மடம் பலாலி ரோடில் நான் வசித்த 1977 இலிருந்து...

1990 இல் சென்னையில் 'பொம்மை' பத்திரிகையில் நான் உதவி ஆசிரியராக பணியாற்றிய போது, பொம்மையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்த போது...மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

எனது மண்ணைச் சேர்ந்த இந்த ஜனா இப்போது எங்கே இருப்பார்?..எப்படி இருப்பார்?..என்று யோசித்தேன்.

ஒரு தடவை அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அவர் எங்கிருப்பார் என்பது தெரியவில்லை.
பின்பு காலச் சுழலில் இதை மறந்து விட்டேன்.


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் , சென்னை நண்பர் ராஜேந்திர உடையார்... லண்டன் வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் ஜனாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த போது கூட 31 வருடமாக நான் தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜனா தான்... இந்த ஜனா என்று எனக்குத் தெரியாது.

நம் இருவரின் உரையாடல்களின் மத்தியில் தற்செயலாக நான் 'பொம்மை'யில் பணியாற்றியது பற்றிக் கூறப் போக, ஜனா 31 வருடத்திற்கு முன்பு அதில் கமலுக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி சொல்லப் போக...என்னால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி!....ஆனந்த அலை...

லண்டன் திரும்பியதும் மறக்காமல் 'பொம்மை'யில் தாம் எழுதிய கடிதத்தின் பிரதியை உடனே எனக்கு அனுப்பி வைத்தார்.

ஊர் திரும்பியதும் அவர் வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே என்னைச் சந்தித்த அனுபவங்களை... ஒரு ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த போது கிடைக்கும் பரவசத்தோடு பகிர்ந்து கொண்டார்.

'இது தான்... விட்ட குறை தொட்ட குறையோ...' என்று அவர் ஒலி வாங்கியில் சொல்லிக் கொண்டிருந்த போது...எனது கண்களில் ஈரம்.
நான் அழுகின்றேனா?


லண்டன் தமிழ் வானொலியில் ஜனா..எனது சந்திப்புப் பற்றிக் கூறியதை செவி மடுக்க இங்கே அழுத்துங்கள்.

அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்...


அன்புள்ள சுதாகர் அவர்களுக்கு,

உண்மையில் அன்றைய சந்திப்பில் நான் உங்களிடமும், திரு. ஜனா அவர்களிடமும் செவ்வி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் உங்களைச்சந்தித்த பின்னும், நீங்கள் இருவரும் அளவளாவிய போதும், நான் மெய் மறந்து அந்த இரண்டு மணி நேரத்தையும் உங்கள் உரையாடலை கவனிப்பதிலேயே செலவழித்துவிட்டேன்.

அந்த உரையாடல் உண்மையில் ஒரு கலைப்பொக்கிஷம் எனில் அது மிகையல்ல!

அங்கே பரிமாறப்பட்ட செய்திகளும், பகிர்ந்து கொண்ட நினைவலைகளும் ஒரு வரலாற்று ஆவணமாகப் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. நிச்சயம் பாதுகாப்பேன்!

இப்பொழுதும் நேரம் அனுமதிக்கும் போது அந்த உரையாடலை செவிமடுக்கத்தவறுவதில்லை...

உங்
கள் சந்திப்பில் என் பங்கு அணில் பங்கு போலத்தான்..ஆயினும் என்னை இங்கே நினைவு கூர்ந்திருப்பது உங்களின் உயர்ந்த உள்ளத்தை பறைசாற்றுகிறது..

மிக்க நன்றியுடன்..

அன்பன்,

இராசேந்திர உடையார்.

Wednesday, September 17, 2008

அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்



'லண்டன் தமிழ் வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து எழுதிய கடிதம்.
1977 'பொம்மை' சஞ்சிகையில் பிரசுரமானது.
நடு நிலையான ஜனாவின் விமர்சனக் கடிதத்திற்கு கமல் எழுதிய மனம் திறந்த பதிலையும் படிக்கலாம்.

'நடிகர் திலகத்தின் வாரிசாக கமல் வர வேண்டும்... உயர வேண்டும்...' என்று 31 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'ஜனாவின் தீர்க்க தரிசனம்' சிலிர்க்க வைக்கிறது. - யாழ் சுதாகர்

கடிதத்தை தெளிவாகப் படிக்க...ஒவ்வொரு கடிதத்தின் மீதும் மவுசினால் ஒரு முறை அழுத்துங்கள்.